சமய விஞ்ஞானம்

 


"சமய விஞ்ஞானம்" எனும் தலைப்பையுடைய இந்த சிறிய புத்தகம் பார்ப்பதற்கு எளிமையானதாக இருக்கலாம், ஆனால் அதன் உள்ளடக்கங்கள் சாதாரணமானவையோ அல்லது சராசரியான விஷயங்களை பற்றியதோ அல்ல. இது அமெரிக்கா மற்றும் அனைத்து மேற்கத்திய வாழ் மக்களுக்கும் இந்தியாவின் கால வரையரையற்ற ஆன்மீக ஞானம் மற்றும் யோகாவினை கொண்டு சென்ற முன்னோடியான ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர் அவர்கள் அமெரிக்காவில் ஆற்றிய முதல் உரையை உள்ளடக்கியது. சுவாமிஜி (பரமஹம்ச யோகானந்தர்) 1920 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச சமய முற்போக்குவாதிகள் மாநாட்டில் இந்திய தேசம் மற்றும் அதன் புராதனமான சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக பங்கேற்க சென்றார்.


பரமஹம்ச யோகானந்தர் ஒரு அறிமுகம்.
பரமஹம்ச யோகானந்தரின் புனிதமான பெயரைப் கேட்டிராதவர்களுக்கு: சுவாமிஜி 1893 ல் கோரக்பூரில் மிகுந்த பக்தி மற்றும் செல்வாக்குடைய ஒரு பெங்காலி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். அவரது இயற்பெயர் முகுந்த லால் கோஷ் ஆகும். அவரது பெற்றோர் இருவரும் காசியில் வாழ்ந்த இனையற்ற யோகி ஸ்ரீ லஹிரி மஹாசாயா அவர்களின் சீடர்கள் ஆவர். தனது இளமைக் காலத்தில், முகுந்தா தனது மிகுந்த அன்பிற்குரிய குருநாதரான ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரியை சந்தித்தார். அவரும் ஸ்ரீ லாஹிரி மஹாசாயாரின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது. முகுந்தா தனது குருவிடமிருந்து ஆன்ம விடுதலை யுக்தியான க்ரியா யோகா கலையினை கற்றார். பின்னர் முறைப்படி சன்யாசம் பெற்று 'பரமஹம்ச யோகானந்தர்' என்ற பட்டத்தினை பெற்றார். 1920 ஆம் ஆண்டில், சுவாமிஜி அவர்கள் ஸ்ரீ லஹிரிய மஹாசயாவின் குருவான மஹாவதார் பாபாஜியின் தரிசனத்தை பெற்று, அமெரிக்காவிற்கு 'கிரியா யோகா' மற்றும் சனாதன தர்மத்தின் போதனைகளை பரப்புவதற்காக புறப்பட்டார். சுவாமிஜியை இவ்வசாதாரணமான பொறுப்பிற்கு தேர்வு செய்தவரும், சுவாமிஜியை அவருடைய பிறப்பிலிருந்தே மிகுந்த அக்கறையுடனும் கவனத்துடனும் கண்காணித்து கொண்டிருந்தவரும் மஹாவதார் பாபாஜி அவர்களே ஆவர். பின்னர் அவரை அவரது அன்பிற்குரிய குருநாதர் ஸ்ரீ யுக்தேஷ்வரிடம் வழி நடத்தியதும் அவரே. சுவாமிஜி தனது வாழ்வின் அடுத்த மற்றும் அவரின் இப்பிறவிக்குரிய இறுதி 32 ஆண்டுகளை அமெரிக்காவில் கழித்தார். அங்கு அவர் ​​எண்ணிலடங்கா விரிவுரைகளை வழங்கியதோடு 'செல்ப்ஃ ரியாலய்சேஷன் பெஃல்லோஷிப்' (SRF) என்ற இயக்கத்தை ஏற்படுத்தி, அதன் தலைமையகத்தை கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் உள்ள மவுண்ட் வாஷிங்டனில் உருவாக்கினார். SRF' என்பது, சுவாமிஜி அமெரிக்காவிற்கு கிளம்புவதற்கு முன் இந்தியாவில் அவர் நிறுவிய 'யோகதா சத்சங்க சொசைட்டி' (YSS) யின் சகோதர மற்றும் தலைமை நிறுவனமாகும். 1946 ஆம் ஆண்டில் சுவாமிஜி தனது உலகப் புகழ்பெற்ற, மற்றும் உலகெங்கும் அதிக அளவில் விற்பனையான, 'ஒரு யோகியின் சுயசரிதை' புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அப்புத்தகம் வேறு எந்த புத்தகத்தையும் போல் அல்லாது உலகெங்கிலும் எண்ணிலடங்கா ஆன்மீக தேடல் உடையவர்களின் வாழ்க்கையை பாதித்தது அல்லது புரட்டி போட்டது என்றே கூறலாம்.

அமெரிக்க மண்ணில் சுவாமிஜியின் முதல் உரைசமய விஞ்ஞானம் ':
அவரது உரையின் முதல் பகுதியில் (அதனால் புத்தகத்திலும்), சுவாமிஜி உலகின் அனைத்து முக்கிய மதங்களின் உலகளாவிய மற்றும் அடிப்படை ஒருமைப்பாட்டை நிறுவுகிறார். துன்பத்தை நிரந்தரமாக அகற்றுவதும் நிரந்தரமான மகிழ்ச்சியை அடைவதுமே எல்லா மதங்களின் பிரதானமான நோக்கம் என அவர் நிரூபணம் செய்கிறார். பின்னர் துக்கம் அல்லது துன்பம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றின் அடிப்படை தன்மைகளை ஆய்வு செய்கிறார். ஒரு குறிப்பிட்ட பொருளினாலோ அல்லது உலகியல் சார்ந்த சாதனையிலாலோ ஏற்படும் தற்காலிக மகிழ்ச்சிக்கும் எப்பொழுதும் மாறாத நித்திய ஆனந்தத்திற்கும் உள்ள வேறுபாட்டினை அவர் தெளிவாக உணர்த்துகிறார். எந்தவொரு வெளிப்புற காரணி அல்லது காரணத்தையும் பேரின்பம் சார்ந்து இல்லை என்பதால், இந்த உலகில் எப்பொழுதுமே மாறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலைகளால் அப்பேரின்பம் சற்றும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். கடவுளின் சாராம்சம் மற்றும் இயல்பே பேரின்பம் என்பதினால், கடவுள்-உணர்தல் மற்றும் பேரின்ப-உணர்தல் ஆகிய இரண்டும் ஒன்றே என சுவாமிஜி நிரூபிக்கிறார். துக்கம் அல்லது துன்பத்தை நிரந்தரமாக நீக்குதல் மற்றும் பேரின்பத்தை அடைதல் ஆகிய இவ்விரண்டும் அனைத்து மதங்களுக்குமே அவசியமானதொரு குறிக்கோளே ஆகும். பண்டைய இந்து நூல்களில் கூறப்பட்டுள்ளபடி, இக்குறிக்கோளை அடைவதற்கு சுவாமிஜி சமயம் சார்ந்த நான்கு வழிமுறைகளை பட்டியலிடுகிறார். மேலும் அந்நான்கு முறைகளில் எப்படி ஒன்று முந்தைய முறையை விட சிறப்புடையது மற்றும் அந்நான்கில் எப்படி நான்காவது முறையே சிறந்தது எனவும் விளக்குகிறார். சுவாமிஜி பட்டியலிட்ட நான்கு மதம் சார்ந்த வழிமுறைகள்: 1) அறிவார்ந்த முறை, 2) பக்தி முறை, 3) தியான முறை, இறுதியாக 4) அறிவியல் சார்ந்த அல்லது யோகா முறை (க்ரியா யோகா). முதல் மூன்று முறைகள் ஒவ்வொன்றையும் விவரித்துவிட்டு, சுவாமிஜி நான்காவது 'விஞ்ஞான' அல்லது 'யோகா சார்ந்த முறை ' மற்ற மூன்று முறைகளை விடவும் மேன்மையானது என கூறுகிறார். ​​ உடலமைப்பு மற்றும் மனம் சார்ந்த தடைகளை இந்த நான்காவது யோகா சார்ந்த முறையால் முறியடித்து, பேரின்பம் அல்லது இறை நிலையை உணர முடியும் என்று மொழிகிறார். அதற்கு பின்னர் சுவாமிஜி மேற்கூறிய நான்கு மதம் சார்ந்த வழிமுறைகளைகளையும் மதிப்பிடுவதற்கு தேவையான அறிவு சார்ந்த மூன்று கருவிகளை சுட்டிக்காட்டியுள்ளார். அவை: 1) புலனுணர்வு, 2) அனுமானம், மற்றும் 3) உள்ளுணர்வு. முதல் இரண்டு முறைகள் நமது ஐம்புலன்களை சார்ந்தவையாகும். அவை ஐம்புலன்களை கொண்டு அறியக்கூடிய இப்புற உலகை சம்பந்தப்பட்டவையே ஆகும். ​​சுவாமிஜி குறிப்பிட்ட மூன்றாவது முறையானது, நுண்ணியமான சூட்சும உலகிற்கு நுழைவாயிலாகவும், ஐந்து புலன்கள் மற்றும் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டதாகவும் விளங்கும். இறுதியாக ,உள்ளுணர்வு மூலம் கடவுளின் அணைத்து அம்சங்களையும் உணர முடியும் என சுவாமிஜி வலியுறுத்திகிறார்.ஜெய் குரு....

விஜய் ராமலிங்கம்.

Comments

Popular posts from this blog

Mission Impossible 5 Rogue nation - Movie review

Why Doing Jigsaw Puzzles Helps Maintain Memory

Are we content with what we are and the way we live our lives ...